அரசு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சர்வீஸ் சேவை: எவ்வளவு கட்டணம் தெரியுமா?
ஆகஸ்ட் 03.,
கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை மற்றும் ஓசூர் நகரங்களில் இருந்து, சென்னைக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில், பார்சல் சேவை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில், செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களில் பார்சல் சேவையும் ஒன்றாக இணைந்துள்ளது. அதன்படி, பேருந்தில் உள்ள சுமைப்பெட்டிகளுக்கு, மாதம் மற்றும் தினசரி வாடகை அடிப்படையில் பார்சல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்து மற்றும் லாரியை விட, அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் கட்டணம் குறைவாகவும், அதேநேரத்தில் பார்சல் ஒரேநாளில் சென்றடையும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை மற்றும் ஓசூர் நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும், அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட பல பகுதிகளில் இருந்துவரும் பார்சலை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதேபோல, சென்னையில் இருந்து இந்த 7 நகரங்களுக்கும் பார்சல் அனுப்ப முன்பதிவு செய்யப்படுகிறது. மாத வாடகை அடிப்படையில் பொருட்களை அனுப்பும்போது, பயனாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான பாஸ் வழங்கப்படும்.
மேலும், பொருட்கள் அனுப்பப்படும் தேதிகளில், அந்த பாஸில் டிக் செய்யப்படும். அதனால், பயனாளர்கள் அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம். 80 கிலோ வரையிலான பார்சலை, திருச்சி மற்றும் ஓசூரிலிருந்து சென்னைக்கு அனுப்ப 210/- ரூபாயும்,
மேலும், மதுரையில் இருந்து சென்னைக்கு அனுப்ப 300/- ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு அனுப்ப, 330/- ரூபாயும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பார்சல் அனுப்ப, 390/- ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு, தனியாக 18 சதவிகிதம் ஜி.எஸ்.டியும் விதிக்கப்படுகிறது.