போதை பொருள் விற்பனை செய்தால் சொத்துக்கள் முடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆகஸ்ட் 10.,
போதை என்பது தனி மனித பிரச்சனை அல்ல சமூக பிரச்சனை' போதைப்பொருள் பழக்கம் சமூகத் தீமை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காகவே இந்த கூட்டத்தை இதுவரை கூட்டியுள்ளோம். ஆனால், முதல் முறையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தற்போது கூட்டியுள்ளோம்.
நம் நாட்டின் அழிவு பாதையான போதை பொருளை முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்கவேண்டும். அதற்கான உறுதியை எடுக்கவேண்டும். நமது மாநிலத்திற்குள் போதை மருந்துகள் நுழைவதை தடுக்கவேண்டும். போதை மருந்துகள் விற்பனையை தடுக்கவேண்டும், போதை மருந்துகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். போதை மருந்துகள் பயன்படுத்தவர்களை அதிலிருந்து மீட்டு, நல்வழி படுத்தவேண்டும்.
நாம் இந்த உறுதியை மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை, மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டு குறைவுதான் என்று நான் சமாதானம் அடைய தயாராகயில்லை. போதை என்பது தனிமனித பிரச்சனை அல்ல, சமூக பிரச்சனை. போதைப் பொருள் பழக்கம், சமூகத் தீமை. இதை அனைவரும் சேர்ந்து தான் தடுத்தாக வேண்டிய கட்டாயமிருக்கு.
அதேபோல், போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக, தீவிர பிரச்சாரம் செய்யவேண்டும். போதை பொருட்கள் நடமாட்டம் பள்ளி, கல்லூரிகளில் இல்லாமல் கண்காணிக்கவேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி வருவதை முற்றிலும் தடை செய்யவேண்டும். போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். ஒரு சேர சமூகம் இயங்கினால்தான் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு செயல்பட முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.