25 கிலோ அரிசி பைக்கு பதிலாக 26 கிலோ அரிசி பை: அரிசி ஆலைகள் தயாரிக்க காரணம் என்ன?
ஆகஸ்ட் 03.,
திருப்பூரில் 25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட அரிசிகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளதால், பெரும்பாலான அரிசி ஆலைகள் 25 கிலோ பேக்கிற்கு பதிலாக 1 கிலோ கூடுதலாக சேர்த்து 26 கிலோ அரிசி பையாக தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதாவது, 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, 25 கிலோ வரையிலான பேக்கிங் செய்யப்பட்ட பிராண்ட் மற்றும் நான் பிராண்ட் (Brand & Non brand) அரிசிகளுக்கு 5% வரி விதிக்கப்பட்டதால் அரிசியின் விலையும் கூடுதல் ஆனது.
இதனால், ரகத்திற்கு ஏற்றபடி அரிசி உள்ள நிலையில், தோராயமாக 1,000/- ருபாய்க்கு விற்கப்பட்ட 25 கிலோ அரிசி பேக்கிங், 5% வரி விதிப்பிற்கு பிறகு 50 ருபாய் உயர்ந்து, 1,050-க்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, புதிய முயற்சியாக 26 கிலோ அரிசி பேக்கிங் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வர துவங்கியுள்ளது. உணவு துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் பேசிய பின்பே, இந்த 26 கிலோ பேக்கிங் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் திருப்பூ அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதுவரை விற்கப்பட்ட 25 கிலோ அரிசி பேக்கிங்கிற்கு பதிலாக, 1 கிலோ கூடுதலாக வைத்து 26 கிலோ பேக்கிங் செய்யும்போது மக்களுக்கு 50 ருபாய் குறைவாக கொடுக்க முடியும் என்று அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர். LMA Legal Metrology Act விதிகளின் படி ஒவ்வொரு 5 கிலோ எடை கொண்ட பேக்கிங் தான், செய்ய வேண்டும் என்ற நிலை இருந்ததாகவும், தற்போது, அந்த சரத்து ரத்து செய்யப்பட்டு ஜி.எஸ்.டி விதிகளின் படி 25 கிலோவிற்கு மேல் செல்லும்போது வரிக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெளிவுபடுத்திய பின்பே, இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும், சில்லறை வணிகம் 25 கிலோவிற்கு உட்பட்டது என்றும், மொத்த வியாபரம் 25 கிலோவிற்கு மேல் உள்ளது என்றும் பிரித்துள்ள நிலையில், ஜி.எஸ்.டி விதியின்படி, அரிசிக்கு சில்லறை வர்த்தகம் செய்வதற்கு மட்டுமே 5% வரி விதித்துள்ளதாகவும், அதனால், 26 கிலோ அரிசி பேக்கிங் செய்வது முழுக்கவே சட்டத்திற்கு உட்பட்டது என்றும் கூறுகின்றனர்.